ஒரு சமூக சேவகர், மனிதர்கள் பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பது பற்றி உதாரணங்களுடன் வெகு அழகாக விளக்கிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி உட்பட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே இனிப் பிறர் பொருளுக்க ஆசைப்படுவதில்லை என முடிவெடுக்கும் அளவுக்குப் பிரசங்கம் வெகு சிறப்பாக அமைந்திருந்தது.வீட்டுக்குச் சென்ற பின்பு ஏற்கனவே களவாகப் பிடித்து அடைத்து வைத்திருந்த அடுத்த வீட்டுச் சேவலை மனைவியிடம் கொடுத்துக் கறி சமைக்கும் படி அதே பிரசங்கி கூறினாராம். மனைவி ஆச்சரியத்துடன் பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என அவர் போதனை செய்ததைப் பற்றிக் கேள்வி எழுப்பினா ளாம். அவர் மெல்லச் சிரித்தவாறே "மண்டு! ஊருக் கல்லோடி உபதேசம்; உனக்கும் எனக்கும் இல்லையடி'' என்று சொன்னாராம்.

 மஹிந்தவின் உரை எப்படியிருந்தது?

இது சில வேஷதாரிகளை நையாண்டி செய்வதற்குத் தமிழ் மக்கள் மத்தியில் கூறப்படும் ஒரு பழங்கதை. அண்மை யில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ உரையாற்றிய போது இந்தக் கதை ஞாபகத்துக்கு வந்து நின்றது.அவரது நீண்ட உரையின்போது அவர் குறிப்பிட்ட சில விடயங்கள் ஊருக்கு மட்டும் உபதேசம் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந் திருந்தமையை அவதானிக்க முடிந்தது. 
"ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்து வமான சமூக, மத மற்றும் கலாசார அடையாளங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. மனித உரிமைகள் என்ற பேரில் நாடுகளின் தனித்துவமான அடையாளங்களில் தலையீடு செய்வதோ மற்றும் மத கலா சார விவகாரங்களில் தலையீடு செய் வதோ ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல'' என்று தெரிவித்த இலங்கை ஜனாதிபதி, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீ கரிக்க வேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தியிருந்தார்.வடக்குக் கிழக்கில் தான் பாலாக மழை பொழிய வைத்தது போல வும் அங்குள்ள ஆறுகள், குளங்கள், கிணறு கள் எல்லாவற்றிலும், தான் தேன் ஊற வைத்தது போலவும் வடக்கு, கிழக்கு மக்கள் உபரிகைகளில் நின்று சுகந்தம் வீசும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது போலவும் அங்குள்ள குறைந்தளவு படையினர் மக்களுக்கு கைகட்டிப் பணிபுரிகின்றனர் என்பது போலவும் ஜனாதிபதி தனது உரையில் ஒரு தோற்றப் பாட்டை வெளிக் காட்டியமை பற்றி நாம் இங்கு விமர்சிக்க முயலவில்லை. எப்போ துமே அவர் சர்வதேச மேடைகளில் உண்மை யிலிருந்து வெகு தொலைவில் நின்றே உரையாற்றுவதை நாமும் அறிவோம்; உலகமும் இதனை நன்கு அறியும்.

உண்மைகளை வெளியே கொண்டு வருவோர் நிலை
 
அவரது கூற்று மாறாக யாராவது உண்மைகளை ஆதாரபூர்வமாக வெளிக் கொண்டு வந்து விட்டால் அவர்கள் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பிரசாரம் செய்கிறார் கள் எனக் குற்றம் சாட்டப்படுவதையும் உலகம் அறியும்.ஆனால் நாம் இங்கு கவனத்தில் எடுப்பது ஒரு நாட்டின் சமூக, மத, கலாசார விழுமியங்கள் மீதான அந்நியத் தலையீடுகள் தொடர்பான அவரின் எதிர்ப்புக்குரல் தொடர்பான நியாயத்தன்மையைப் பற்றிய விடயங்களாகும்.இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதும் அவர்களுக்கெனத் தனித்துவமான சமூக, மத, கலாசார அடையாளங்கள் உண்டு என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். இலங்கையில் தமிழ் மக்கள் கிறிஸ்துவுக்கு முன்பு ஐந்தாம் நூற்றாண்டிலேயே நாகரிகம் உள்ள ஒரு சமூகமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை அண்மைக் காலத்தில் கந்தரோடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நகரங்கள் கட்டி அமைக்கப்பட்டமை, கடல் வணிகம் மேலோங்கியிருந்தமை போன்றவற்றுக்கான தொன்மை ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இராமாயணம் என்ற தொன்மை வாய்ந்த இலக்கியம் இலங்கையில் திராவிட சமூகத்தினர் மத்தியில் முன்னேறிய நகரஅமைப்புகள் உருவாக்கப்பட்டமையும் அடிமை, ஆண்டான் சமூக அமைப்பு உருவாகுமளவுக்கு முன்னேறியிருந்தமையையும் அந்தப் படையெடுப்புப் பற்றியும் தெளிவுபடுத்துகிறது.
 
நியாயமான கோரிக்கை

சிங்கள இனத்தின் சமூக, மத, கலாசார விழுமியங்களுக்குக் குந்தகம் ஏற்படுத்தக் கூடாது என்ற ஐ.நா. கூட்டத் தொடரில் அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையிலும் நியாயமானது. அதைத் தவறு என எவருமே கூறிவிட முடியாது. ஆனால் அவர் மனித உரிமைகளின் பெயரால் நாட்டினதோ, இனத்தினதோ தனித்துவமான அம்சங்கள் மேல் தலையீடு செய்வதை அனுமதிக்க முடியாது என அவர் கூறியதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.அதாவது மனித உரி மைகள் என்பன சிங்கள மக்களின் இன, சமூக, மத, கலாசார விழுமி யங்களுக்கு விரோதமானவையா என்ற கேள்வியையே அவரின் கருத்துகள் எழுப்புகின்றன. உண்மையிலேயே தமிழ் மக்களின் சமூக, மத கலாசாரங்கள் மீது சிங்கள மேலாதிக்க சக்திகளால் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தி லிருந்தே ஒரு போர் தொடுக்கப்பட்டு வந்தது. எனவே தமிழ் மக்கள் முதலில் தமது அடையாளங்களைப் பாதுகாக்க சாத்வீக வழியில் போராடினர். அந்தப் போராட்டங்கள் ஆயுத வன்முறைகள் மூலம் அடக்கப்பட்டன. ஆயுதத்தைத் தொட்டுக் கூடப் பார்க்காத பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பலி கொள்ளப்பட்டனர்.எனவே பிரிந்து போவதை விட வேறு வழி இல்லையென்ற முடிவுக்கு வரவேண்டிய நிலை தோற்றுவிக்கப் பட்டது. அடக்குமுறை ஆயுதவன் முறைக்கு எதிராக விடுதலை ஆயுத வன்முறை வெடித்தது.அதாவது ஆயுதப் போராட்டம் என்பது திடீரென வெடித்த ஒரு பூகம்ப மல்ல. எமது இன, மத, கலா சார விழுமியங்களை அழிவிலிருந்து பாதுகாக்க நாம் நடத்திய போராட் டங்களின் பரிணாம வளர்ச்சி. அது ஆனால் அந்த உரிமைப் போராட்டம் பயங்கரவாத நாமம் சூட்டப்பட்டு சர்வதேச ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டது.இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளைத் துடைத்தழிப்பதிலும் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை நசுக்கு வதிலும் வேறு எந்த ஒரு சிங்களத் தலைவர்களையும்விட தீவிரமாகச் செயற்பட்டவர். சாதாரண தமிழ் மக்க ளின் உயிரழிவைப் பற்றிக் கவலையின்றி மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துப் போரை வெற்றி கண்டவர்.போர் முடிந்த பின்பும் தமிழ் மக்களின் சமூக, மத, கலாசார விழுமியங்கள் மேல் தொடர்ச்சியான போரை நடத்தி தமிழ் மக்களின் இனத் தனித்துவத்தை அழிக்க முனைப்புடன் செயற்பட்டு வருகிறார்.

பறிக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேசங்கள்

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பல பிரதேசங்கள் இராணுவ முகாம் களாகவும் உயர் பாதுகாப்பு வலயங் களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. இவற் றில் இன்றுவரை அவர்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அகதி முகாம்களிலும் உறவி னர் வீடுகளிலுமே தொடர்ந்து பல இன் னல்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்ற னர். இவற்றில் முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களைச் சொந்தக் கிராமங்களாகக் கொண்டவர் கள்  கூட வேறு பிரதேசங்களில் குடியேற்றப்படுகின்றனர். விவசாயம் செய்யப்பட்ட வளமான நிலங்கள், மீன்பிடித் தொழிலில் செழிப் புற்றிருந்த கடற்கரைக் கிரா மங்கள் எனப் பல பகுதிகள் தமிழ் மக்களிடமிருந்து நிரந்தரமாகவே பறிக்கப்படுகின்றன. அனல் மின் நிலையம் என்ற பெயரில் சம்பூர் மக்களின் பரம்பரை பூமி பறிக்கப்பட்டு விட்டது.  
சுற்றுலா அபிவிருத்தி என்ற பேரில் குச்சவெளி நிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், தனிக்கல்லு, பட்டிக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் சிங்கள வர்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழங்கப்பட்டு விட்டது. இவ்வாறே கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கரைவலை மீன்பிடி உரிமை தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.

மஹிந்த அரசின் கொடூரத் தலையீடுகள்
 
அதாவது தமிழ் மக்களின் குடியிருப்பு, பொருளாதார, வாழ்வியல் எனப்படும் சமூக விழுமியங்கள் மீது மஹிந்த அரசின் பூரண அனுசரணையுடன் கொடூரமான தலையீடு மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதாவது பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த சமூக விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன.இவ்வாறே வடக்கு, கிழக்கில் ஒரு புத்த மதத்தவன்கூட வாழாத இடங்களில் கூட பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் உருவாக்கப்படுகின்றன. எமது சொந்த வழிபாட்டு முறைகளான இந்து, கிறிஸ்தவ முறைகளுக்கு அப்பால் பௌத்த மதம் எம்மேல் திணிக்கப்படுகிறது.இதேவேளை, எமது பாரம்பரிய வழிபாட்டு முறைகள் மீது செய்யப்படும் தலையீடுகள் எமது மத விழுமியங் களையே அழிக்குமளவுக்கு விஸ்வரூ பம் எடுத்துவிட்டன. அண்மையில் சிலாபம் பத்திரகாளி அம்மன் கோயிலில் மிருகபலி மேற்கொள்ளப்படவிருந்த சமயத்தில் அங்கு வந்த அமைச்சர் மேர்வின் சில்வா அங்கிருந்த மிருகங்களை அள்ளிச் சென்றுவிட்டார்.அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்ற வகையில் மேர்வின் சில்வாவின் நடத்தைக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கும் உண்டு. அதுமட்டுமன்றி அனுராதபுரத்தில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு முஸ்லிம் தர்க்கா புத்த பிக்குகள் தலைமையில் வந்த ஒரு கூட்டத்தால் இடித்து அழிக்கப்பட்டது. சுற்றுலா அபிவிருத்தி என்ற பேரில் வடக்கு, கிழக்கின் பகுதிகளிலும் முளைத்து வரும் சுற்றுலா விடுதிகளும் களியாட்டு மையங்களும் எமது பாரம்பரிய கலாசாரத்தின் மீது பெரும் தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துள்ளன. தென்னி லங்கையிலிருந்து பாலியல் தொழி லுக்கெனப் பெண்கள் இங்கு கொண்டு  வரப்படும் ஒரு கேவலமான நிலைகூட உருவாகி வருகிறது. அதாவது நாம் பாரம்பரியமாகப் பேணிவந்த எமது கலாசார விழுமியங்களைச் சிதைக்கத் திட்டமிட்ட வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கலாசார விழுமியங்களை சிதைக்கும் நடவடிக்கை
 
ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு நாட்டின் சமூக, மத மற்றும் கலாசார விழுமியங்கள் மீது தலையீடு இருக்கக் கூடாது என உரத்துக் குரலெழுப்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  உள்நாட்டில் வாழும் தமிழ் , முஸ்லிம் மக்களின் சமூக, மத, கலாசார விழுமியங்கள் மீது தலையீடு செய்வது மட்டுமன்றி அவற் றைச் சிதைக்கும் கொடுமையிலும் ஈடுபட்டு வருகிறார்.அதாவது ஊருக்குத்தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்ற வகையிலேயே அவர் செயற்பட்டு வருகிறார். ஆனால் சர்வதேசம், சிங்கள மக்களின் சமூக, மத,கலாசார விடயங்களில் தலையீடு செய்வதாக எவ்வித தகவலும் இல்லை. ஆனால் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் சமூக, மத, கலாசார அம்சங்களுக்கு  எதிராகச் செயற்படுவதை மனித உரிமைகளின் பெயரால் கண்டனம் செய்து வருகின்றது. அநியாயங்களைத் தொடர்ந்து மேற் கொண்டுவரும் எவரும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதை விரும்புவதில்லை என்பது உண்மை தான். அந்த வகையில் ஜனாதிபதி ஓர் இனத்தின் மீதான மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறை பற்றிப் பேசுவதுகூட ஒரு தலையீடு எனக் கூக்குரலிடுகிறார்.மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான கண்டனங்கள் ஒரு நாட் டின் அடிப்படை விடயங்களில் தலையீடு செய்யும் தவறு என்றால் அந்த நாட்டின் மனித உரிமை மீறலும் இனங்கள் மீதான ஒடுக்குமுறையும் அங்கீகரிக்கப்பட்டவை என்பதுதான் அர்த்தமல்லவா?இந்த நிலையில் தமிழ் மக்களின் சாதாரண அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கும், அப்படி வழங் கப்படும் கோரிக்கைகளைப் பயங்கர வாதம் என்றோ அந்நியத் தலையீடு என்றோ குற்றம் சாட்டும் மஹிந்த ராஜபக்ஷ பாலஸ்தீன மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

எல்லாம் ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை என்பதன் வெளிப்பாடுதான்.   

Powered By: TNPF

பார்வை