ஸ்ரீலங்கா அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் சம்பூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை யின் போது அப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந் தனர். ஆந்தப் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்போகின்றோம் என்பதனை சாட்டாகக் கூறி சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, இளக்கந்தை மற்றும் கடற்கரைச்சேனையின் ஒரு பகுதி உள்ளடங்கிய சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பேணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு மூதூர் பிரதேச செயலக புள்ளிவிபரத் திரட்டின்படி 1940 குடும்பங்களைச் சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்துள்ளனர். பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இப் பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் நெல் வயலும், சுமார் 1000 ஏக்கர் குடியிருப்புப் பிரதேசமும் சுமார் 2000 ஏக்கர் மேட்டு நிலமும் சுமார் 4500 ஏக்கர் காட்டுப் பிரதேசமும் காணப்படுகின்றன.இப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்ற சம்பூர் மகாவித்தியாலயம் இன்று ஒரு கடற்படை முகாமாக உள்ளது. சம்பூர் சிறிமுருகன் வித்தியாலயம், கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சூடைக்குடா பாரதி வித்தியாலயம் என்பன மூடப்பட்ட நிலையில் அழிவடைந்து கொண்டிருக்கின்றன. அப்பகுதி மாணவர்கள் பாடசாலைக் கல்வியின்றி வீதிகளில் அலைகின்றனர். சம்பூர் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களான சிறிபத்திரகாளி அம்பாள் ஆலயம், சம்பூர் பிள்ளையார் ஆலயம், சம்பூர் அரசடி விநாயகர் ஆலயம், சம்பூர் நாகதம்பிரான் ஆலயம், கூனித்தீவு பிள்ளையார் ஆலயம், கூனித்தீவு வடபத்திர காளி ஆலயம், சூடைக்குடா மாரியம்மன் ஆலயம், மற்றும் இளக்கந்தை வைரவர் ஆலயம் என்பன கடந்த 6 வருடங்களாக மக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, பூஇஐகள் எதுவுமின்றி சிதிலடைந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக் கிடையே 500 மெகா வாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய அனல்மின்நிலையம் ஒன்றை சம்பூரில் அமைப்பதற்கான உடனப்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெறும் 500 மெகா வாட் மின்சாரத்திற்காக பத்தாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டு சுமார் பத்தாயிரம் தமிழ் மக்கள் நடுத் தெருவில் விடப்பட்டு அவர்களது வாழ்வும் பலியிடப் பட்டுள்ளது. அனல் மின் நிலையத்திற் காக 500 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. மிகுதி 9500 ஏக்கர் பற்றி எதுவித கதையும் இல்லை. அப்பகுதி மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணியில்லத காட்டுப்புறத்திலுள்ள கருங்கற் பிரதேசங்களில் குடியேறுமாறு தொடர்ச்சியாக இராணுவத்தினர் வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.சனாதிபதித் தேர்தல் காலத்தில் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறும், பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறும் வாக்குக் கேட்டு சம்பூர் மக்கள் தங்கியிருந்த அடிப்படை வசதிகள் ஏதுமற்ற முகாமுக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுடன் கதைத்து சம்பூர் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்ததாகவும்; ஆனால் இன்று வரை மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சம்பூர் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.ஆனால் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்தைகள் நடாத்திய சந்தற்பங்களில் சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டத்தினை தாங்கள் எதிர்க்க வில்லை என்றும் ஏனெனில் மின் நிலையம் அமைக்கப்படாவிட்டால் அப்பகுதியில் பாரிய இலங்கை இராணுவ முகாமை ஸ்ரீலங்கா அரசாங்கம் அமைத்துவிடும் என்பதால் தாம் அதனை எதிர்க்கவில்லை என்றும் கூட்டமைப்பினர் தம்மிடம் கூறியதாக சம்பூர் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.இப்படிக் கூறும் கூட்டமைப்பினர் சம்பூர் மாவித்தியால யத்தில் உள்ள கடற்படை முகாம் உள்ளிட்ட பாரிய படைத்தளங்களை அகற்ற வேண்டும் என்றும் அனல் மின்நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் தவிரவும் மிகுதியான சுமார் 9500 ஏக்கர் நிலங்களில் பொது மக்களை மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஏன் கோரவில்லை. இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை அரசு மீது ஏற்படுத்தி சம்பூர் மக்களை குடியேற்ற உரிய நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை. சிறீலங்கா அரசாங்கத்தை தாயா பண்ணுவதற்காக அப்பகுதியை சிங்களக் குடியேற்றங் களும், இராணுவக் குடியேற்றங்களும் அமைப்பதற்காக அரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதா? கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் சம்பூர் பிரதேசத்தை நிரந்தரமாகவும், முழுமையாகவும் சிங்கள மயமாக்கும் ஸ்ரீலங்கா அரசின் திட்டத்திற்கு துணை புரிவதாகவே உள்ளது. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.இந்தியாவும்  சர்வதேச சமூகமும் ஸ்ரீலங்கா அரசு மீது உரிய அழுத்தங்களைப் பிரயோகித்து சம்பூர் மக்களுக்குச் சொந்தமான 9500 ஏக்கர் பிரதேசத்தினை அம் மக்கள் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க உதவ வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். 

இரா.ஹரிகரன்
அமைப்பாளர்,
திருகோணமலை மாவட்டம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி

செ.கஜேந்திரன் 
பொதுச்செயலார், 
தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Powered By: TNPF

பார்வை