தான் சார்ந்துள்ள சமூகத்தின் இனவிடுதலைக்காய் சுகந்திர வேட்கை கொண்டு பேனா எடுத்துப் போராடிய ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 11வது நினைவு தினம் 23.10.2011 சனிக்கிழமை மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.மயில்வாகனம் நிமலராஜனின் உயிர் பறிக்கப்பட்டு 11 வது நினைவு தினம் இன்று சனிக்கிழமை யாழ்.மறைக்கல்வி நடுநிலையத்தில் உணர்வு பூர்வமாக ஊடகவியலாளர்களினால் நினைவு கொள்ளப்பட்டது.இந்த நினைவு நிகழ்வில் ஊடகவியலாளர் நிமலராஜனுக்கும் உயிரிழந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அகவணக்கம் செலுத்தி, ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இத்தோடு வடபகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகைகளும் வழங்கப் பட்டன.படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் நினைவு தினத்தில் யாழ்.மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜேந்திரன் மற்றும் பிரதேச தலைவர்கள் மறைந்த ஊடகவியலாளர் களின் உறவினர்கள், நண்பர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர் கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.இதேவேளை இனிவரும் காலங்களில் பேனா முனையைத் துப்பாக்கி முனையால் அழிக்க முடியாது என்பதுடன் அவ்வாறு அழிக்க முற்படும் போது எத்தனையோ நிமலராஜன்கள் முளைப்பார்கள்.எனவே ஊடக சுதந்திரத்தையும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் இலங்கை அரசு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் கருத்தை கருத்தால் மட்டுமே முறியடிக்க இலங்கை அரசு முயற்சிக்க வேண்டும்.அதைவிடுத்து மீண்டும் மீண்டும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் உயிர்களைப் பறிப்பது, கடத்துவது போன்ற தனது செயற்பாடுகளுக்கு அரசு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.ஆயுதக் கலாசாரத்தினால் தமிழர்களின் கருத்தியலை வென்றுவிட முடியாதுடன் ஊடகவியலாளர்களின் உணர்வுகளை அழித்திடவும் முடியாது என்பதற்கு நிமலராஜன் ஒரு சான்று.ஒவ்வொரு ஊடகவியலாளர்களின் மூச்சுக்களிலும் அவன் இன்றும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது நிதர்சனமானது.






Powered By: TNPF

பார்வை