தந்திரத்திற்காக உயிர்விலைகளைக் கொடுக்கத் தயாராகவே இருந்தோம், இப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் உயிர்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு பெறுகின்ற சுதந்திரம் யாருக்காக என்ற கேள்வியின் முடிவில் மௌனித்துப்போனோம். ஆனாலும் சுதந்திர எண்ணம் மட்டும் இன்றளவும் உயிரோடு இருக்கின்றது. இதைத்தான் யுத்தம் எம்தேசத்தைத் தின்று நின்றபோது கூறிக்கொண்டோம்.மீட்பர்களைத் தேடி நின்றோம். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையை காலம் எமக்கு இன்று சொல்லிக் கொடுக்கின்றது, கனத்த மனதோடு கேட்டு நிற்கின்றோம். யாரெல்லாம் நாங்கள் நொந்து, நோய்பட்டுக் கிடந்தபோதும், எம் சுதந்திர தாகத்தை தணியவிடாது காப்பதாய் நினைத்தோமோ அவர்களே, நாம் குருதியை எண்ணையாய் ஊற்றி வளர்த்த சுதந்திர தீயை எச்சில் துப்பி அணைப்பதைக் கண்டோம்.வரலாற்றுக் காலம் தொட்டுக் காலகாலமாய் காட்டிக் கொடுப்பாளர்களால், வெட்டிச் சாய்க்கப்பட்ட வீர மறவர்கள் வீழ்ந்து வறண்டுபோய்க் கிடந்த எம் தேசத்து மண் கடந்த 30 வருடம் பூத்துக் குலுங்கியது. மீண்டும் இப்போது கருகத் தொடங்கிற்று. நாங்கள் எதைப் பேசுகின்றோம், என்று பலருக்கு புரியாமல் இருக்கலாம். வழக்கம்போல் தமிழர்களின் அரசியல் மீட்பர்களை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றோம்.கூட்டமைப்பு தற்போது அமெரிக்க விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருக்கின்றது. ஆனால் இன்றளவும் அங்கு பேசப்பட்டவை என்ன? அங்கு பேசப்பட்டவைகளின் அடிப்படையில் தமிழர்களின் அடுத்த கட்ட போராட்டம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியெல்லாம் கூட்டமைப்பு இன்றளவும் மக்களுடன் பேசவேயில்லை. ஏன்! அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட பேசவில்லை.நாங்கள் நினைப்பது எதுவோ அதுவே தமிழர்களின் முடிவு என்பது, கூட்டமைப்பின் எண்ணவோட்டம். ஆனால் அது தமிழர்களின் நிலைப்பாடு அல்ல. அமெரிக்கா பயணத்தின் பின்னர் கூட்டமைப்பின் நகர்வுகளும், பேச்சுக்களும் தடுமாற்றம் நிறைந்தவையாகவும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறானவையாகவும் இருக்கின்றன. இதை அமெரிக்க விஜயத்தின் பின்னர் அதன் முக்கியஸ்த்தர்களுடன் பேசிய சில தென்னிலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.இந்த நிலைமை இலங்கையில் மட்டுமல்லாமல் கனடா, இலண்டன் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர், பொதுமக்கள் சந்திப்பின்போதும், வெளிப்பட்டிருக்கின்றது. குறிப்பாக வடகிழக்கு தமிழர்களுக்குச் சொந்தமானதல்ல என கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இது எதற்காக? என்பது மர்மமாகவே இருக்கின்ற அதேவேளை, கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதும் மர்மமாகவே இருந்து வருகின்றது.அது ஒரு புறமிருக்க, அண்மையில் இணைய ஊடகமொன்றில் எழுதப்பட்டிருந்த கட்டுரையன்றில் குறிப்பிட்டிருந்ததைப்போன்று, கூட்டமைப்பு அமெரிக்க விஜயத்தின் பின்னர் பிற நாடுகளில் நடைபெற்றிருந்த, சந்திப்புக்களில் தமிழர்கள் கடந்த அறுபது வருடங்கள் நடத்திய போராட்டத்திற்கும், அது சார்ந்த தியாகங்களுக்கும், உயிர்க்கொடைகளுக்கும் எதிராகவே பேசியிருக்கின்றது. இதில் குறிப்பாக கூட்டமைப்பு பிரிக்கப்படவேண்டும், என்பதில் அரசாங்கம் தீர்க்கமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என சுமந்திரன் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கருத்தை அவர் வெளிநாட்டில் மட்டுமல்ல தாயகத்திலும் சில முக்கியமான நபர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கின்றார். இதேபோல் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசும்போது இலங்கையில் ஒரு சிறிய பகுதியில் வாழும் சிறிய இனம் நாங்கள் தனி நாடு கேட்பது சரியா? என்றும் கேட்டிருக்கின்றார். இதே நபர்தான் போர்க்குற்றச் சாட்டுக்களை கைவிடவேண்டும் என்றும் கேட்டிருந்தார். எனவே நாம் இங்கு சுமந்திரன் என்பவர் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர் பற்றிய தெளிவு தேசிய பற்றுள்ள சமகால விடயங்களில் அதிக அக்கறையுள்ள மக்களுக்கு புரிந்திருக்கின்றது, குறிப்பாக பாமர மக்களுக்கு.ஆனால் சிலர் கூட்டமைப்பின் மீது அதிருப்பதி ஏற்பட்டு அதிலிருந்து விலகி தேசியத் தலைவர் எதை முன்மொழிந்து சொன்னாரோ அந்த நிலைப்பாட்டில் இன்றளவும் நிற்க நினைக்கின்றார்கள். எனவே அவர்கள் எப்போதும் மக்களால் நேசிக்கப்படப் போகிறார்கள். அவ்வாறு நேசிக்கப்பட்டால், தமது சுயலாப அரசியல் முன்நோக்கங்கள் பிழைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் பறிக்கப்பட்டு விடும் என்பதில்தான் இப்போது தமிழரசு கட்சி சார்ந்தவர்களுக்கு கவலை. இதன் வெளிப்பாடுதான் கூட்டமைப்பை அரசு பிரிக்க நினைக்கின்றது என்பது.எனவே மொத்தத்தில் தமிழர்களுடைய அரசியல் நலனில் எவருக்கும் அக்கறை கிடையாது. தங்களுடைய நிலைகளை பாதுகாத்துக் கொள்வதன் மூலம் இருப்பை நிரந்தரமாக்கி கொள்வதே தற்போதைய போட்டி நிலைக்குக் காரணம். இது அரசாங்கத்திற்கு நிச்சயமாக சாதகமாகவே இருக்கும். இதை விடவும் கூட்டமைப்பின் மீது அதிருப்தி ஏற்பட்டு வெளியேறும் நபர்கள் மூன்றாம் அணியன்றை உருவாக்கி நடந்த, நடக்கின்ற, விடயங்களின்  உண்மைத் தன்மையை வெளிக் கொணர்ந்தால் தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் இனியரு முறை அரசியல் தொடர்பில் சிந்திக்க முடியாது.இதற்கிடையில், கூட்டமைப்பிலுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதாரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் போன்றோர் அதிலிருந்து விலகி எற்கனவே வெளியேறியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களுடன் இணைந்து மூன்றாம் நிலை பேசும் சக்தியை உருவாக்குவது ஆரோக்கியமானது என்பது தாயகத்திலுள்ள பலரின் நிலைப்பாடு. ஆனால் இதற்குள் பழமைவாதிகளும், தேசத்தைக் காட்டிக் கொடுத்த நபர்களும், உள்வாங்கப்படுவது, சிறந்த முயற்சி தொடக்கத்திலேயே சிதைக்கப்படுவதற்குச் சமமானதாகும் என்பதையும் சுட்டிக்காட்டலாம்.ஏனெனில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில், யுத்தத்தை நிறுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திற்கு உத்வேகமளித்தவர்களும், யுத்தத்தை நிறுத்துவது புலிகளுக்கு ஊக்கமருந்து கொடுப்பதை போன்று என வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவர்களும், புலிகளையும், அல்லது புலிகள் சார்ந்த சில நிலைகளையும் து£க்கிப்பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கின்றார்கள். அவர்களை கூட்டமைப்பும் சிரித்த முகத்துடன் வரவேற்றிருக்கின்றது.இதில் முக்கியமாக ஆயுதக்குழு சார்ந்தவர்களும், இறுதி வரையில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாமல் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களது பாதுகாப்பில் வாழ்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர். எனவே இதன் நோக்கம் ஏற்கனவே கூட்டமைப்புடன் இணைந்திருக்கின்ற ஏற்கனவே தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு தாயக விடுதலைப் போராட்டத்திற்கும், அது சார்ந்த நிலைகளுக்கும் தமது உளமார்ந்த பணிகளையாற்றி இறுதிவரை தேசியத் தலைவரின் நம்பிக்கைகுரியவர்களாக இருந்தவர்களை கொச்சைப்படுத்துவதே அதன்நோக்கம்.இது எதற்காகவெனில் கூட்டமைப்பில் அடுத்து தலைமையேற்கும் நிலையில் உள்ளவர்கள். அவ்வாறானவர்கள், எனவேதான் அவர்களை கொச்சைப் படுத்துவதன் மூலம் வெளியில் அவர்களுக்குள்ள நன் மதிப்பை குறைத்துக் கொள்வது என்பதே நோக்கம். இதற்கு உதாரணமாக வெளிநாடொன்றில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மண்டையன் குழுவின் தலைவர் என விவாதித்திருக்கின்றார். அதுவும் வெளிப்படையாகவே.எனவே இந்த உதாரணத்தை குறிப்பிட்டதற்காக நாம் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு வக்காலத்து வாங்குவதாய் பொருள் படாது. ஆனாலும் இதை குறிப்பிடுவதற்குக் காரணம், இதே கதை மாவை சேனாதிராசாவுக்கு இப்போதுதான் தெரியுமா? ஏன் புலிகள் இருந்த காலத்தில், தேசியத்தலைவரை சந்தித்தபோது இதைத் தெரிவித்திருக்கலாமே? ஏன் தேசியத் தலைவரே மன்னித்த பின்னர் அற்பர்கள் நீங்கள் இதை எதற்காக து£க்கிப்பிடித்துக் கொண்டு அலைகிறீர்கள்? தேசியத் தலைவர் முன்மொழிந்து தேசியத்தின் பால் பற்றும் ஈர்ப்பும் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் போன்றவர்கள் மீது சேறு பூசப்பட்டபோதே தமிழர்கள் நாம் விழித்திருக்கவேண்டும். அன்று எப்படி புலிகளால் முன்மொழியப்பட்டவர்கள் என கூறி கூட்டமைப்பின் தலைமை இவர்களை வெளியேற்றியதோ, அவ்வாறே இன்று முன்னாள் ஆயுதக்குழு சார்ந்தவர்கள் என்ற பெயரில் சிலரை வெளியேற்றி விட்டு தாமே தமிழர்களின் பேசும் சக்தி என கூறிக் கொண்டு அரசாங்கத்திடம் எங்கள் தியாகங்களை விற்க தமிழரசுக் கட்சி தயாராகி விட்டிருக்கின்றது.எனவே நாம் இங்கே மிக முக்கியமாக பேச விளைந்த விடயம் இதுவே கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்த அரசு நினைக்கின்றது. இதற்காக அரசு சிலரை விலைக்கு வாங்கியிருக்கின்றது, என்பதெல்லாம் தமிழரசுக் கட்சியினால் புனையப்பட்ட கதைகள் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கப்போவதில்லை. இதேபோல் எனவே தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்த கூட்டமைப்பு சமகாலத்தின் தேவை, எனவே புலம்பெயர் தமிழர்கள் இதற்கு வழிகோலவேண்டும், காலகாலமாக புலம்பெயர் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள், யதார்த்தத்தை உணராதவர்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அவை தோற்கடிக்கப்படவேண்டும். தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவல்ல, தேசியத்தின் பால் பற்றுள்ள, மூன்றாம் நிலைச் சக்தி காலத்தின் தேவை.
-தாயகத்தில் இருந்து இளங்கீரன்-

Powered By: TNPF

பார்வை