திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த சிலை தமிழ் தேசத்தின் இருப்புக்கு எதிரான இனவாதிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இச் செயற்பாடானது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களையும் அவமதிக்கின்ற செயற்பாடாகும் தமிழ்தேசியமக்கள் முன்னணி விடுத்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக தந்தை செல்வநாயகம் அவர்கள் விளங்குகின்றார். அவரது ஞாபகார்த்தமாக திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த சிலை தமிழ் தேசத்தின் இருப்புக்கு எதிரான இனவாதிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இச் செயற்பாடானது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களையும் அவமதிக்கின்ற செயற்பாடாகும். அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள ஆட்சியாளர்களது மன உணர்வுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இனவாதத்தை வெளிப்படுத்தும் இச் செயற்பாட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டிக்கின்றது.கடந்த காலத்தில் தமிழர் தாயகத்திலிருந்து தமிழ் மக்களை விரட்டியடித்து, படுகொலை செய்து, தமிழர் வாழ்விடங்களை ஆக்கிரமித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டதன் மூலம் தமிழ் தேசத்தின் இருப்பை படிப்படியாக அழித்து வந்தனர்.அந்த அழிப்பின் தொடர்ச்சி முள்ளிவாய்க்காலில் பேரவலமாக நடந்தேறியது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழர் தாயத்தை சிங்கள பௌத்தமயமாக்கும் வேலைத்திட்டங்கள் அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. உச்சக்கட்டத்தை அடைந்துள்ள தமிழ் தேசத்தின் இருப்பை அழிக்கும் வேலைத்திட்டத்தின் இன்னும்மொரு மோசமான செயற்பாடே தந்தை செல்வநாயகத்தின் சிலை உடைக்கப்பட்டமையாகும்.  சிங்கள ஆட்சியாளர்கள் தாமாக விரும்பி தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய எந்தவொரு அரசியல்த் தீர்வையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்னும் செய்தி இச்சிலை உடைக்கப்பட்டுள்ளதன் மூலம் வெளிப்படுவதாக உள்ளது.  என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணி விடுத்த கண்டனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை